₹222
கடந்த இருபது ஆண்டுகளாகப் புனைவுலகில் செயல்படும் குமார் அம்பாயிரத்தின் ஒன்பது கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அதற்கு முன் கவிதைகள் எழுதி பண்பட்ட கை. புதுவிதக் கதைகளைப் புதிய கூறல்முறைகளில், பெரிதும் நாட்டார் சொல்முறையில், எழுதியிருக்கிறார். தொகுப்பின் கதைகளைப் படித்து முடித்ததும் மாய உலகம் ஒன்றில் சஞ்சரித்த உணர்வு எஞ்சுகிறது. இயற்கையின், விலங்குகளின், தொன்மங்களின், ஆவிகளின், காமத்தின், சமூகப் பொது நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டவர்களின் கதையுலகம் இது. கட்டியமைக்கப்பட்ட பண்பாட்டுக்கு எதிராகத் தொல்மனிதனின் இயல்புணர்ச்சிகள் இங்கே களிகொள்கின்றன. இலக்கியப் பிரதிகள் அதிகமும் காட்டாத பிரதேசங்களில் கதைகள் நிகழ்கின்றன. இக்கதைகளை உள்ளார்ந்த உண்மையுடன் சொல்ல தனித்த வாழ்க்கைப் பார்வையும் நயமான மொழியும் குமாருக்கு வாய்த்திருக்கின்றன.

மிகுபுனைவும் மாய யதார்த்தமும் முயங்கும் கதையாடல் முறை பல கதைகளில் கையாளப்பட்டிருக்கிறது. தொன்மங்கள் மீதான நம்பிக்கை அடிப்படையில் கிளர்ந்தெழும் கதைகள் அவை. காதல் தோல்வியால் தீயில் தன்னை மாய்த்துக்கொண்ட கன்னிப் பெண்ணின் உக்கிரம் குடும்பத்துக்கு நாசம் விளைவிக்கும் என்பதால் அவளால் இல்லம் சேர இயலாமல் பிணப்பாதையில் தெளிக்கப்பட்ட எள்ளும் முனைமுறிந்த நெல்லும் பாறைகளாக உருமாறி அவளை வழிமறிக்கின்றன (‘ன்யாக்’).
நாட்டார் பாணி கதையாடலலிருந்து நகைச்சுவையையும் கேலியையும் பிரிக்க முடியாது. அந்த பாணி தன் சுற்றத்தையும் கேலி பேசும்; தனக்கு மேலிருப்பவர்களையும் கேலி பேசும். வியத்தலே அதனிடம் கிடையாது. ‘மண்யோனி’ நாட்டார் மரபில் வரும் ஒரு காதல் கதை. யாரும் ஊகிக்க முடியாத காதல் கதை.
குமாரின் மொழி கவனத்துக்குரியது. விளிம்புநிலை, உதிரி மனிதர்களின் வாழ்க்கையையும் விலங்குகள், பூ, மரங்களின் இயல்புகளையும் அவற்றின் நிஜ மணத்தோடும் மொழியோடும் விவரிக்கும் படைப்பூக்கம் அவரிடம் உள்ளது. அயற்கூற்றாகச் சொன்னாலும் பெரும்பாலும் வார்த்தைகள் பொதுத் தமிழுக்கு மாறுவதில்லை. தீட்டு, ஆபாசம் என்று சொல்லி வழக்கமாக ஒதுக்கப்படும் வார்த்தைப் பிரயோகங்களை தேவைப்பட்டால் இயல்பாகப் பயன்படுத்துகிறார். அது நாட்டார் இலக்கியத்தின் இயல்புதான். எண்ணத்தை, காட்சியை அவை மனதில் தோன்றும் கிரமத்திலும் வேகத்திலும் எழுதுவதால் வாக்கியங்கள் கொஞ்சம் பின்னலாகவும் நீளமாகவும் அமைந்துள்ளன. பேச்சு வழக்குச் சொற்கள் ஆசிரியர் விவரிப்பிலேயே பயின்று வருகின்றன.
சமகால தமிழ்ச் சிறுகதைக்குக் காத்திரமான பங்கை வழங்குகிறது இத்தொகுப்பு.
– எழுத்தாளர் ஆர். சிவக்குமார்